கடவுள் சாமி என்பன- பொய் என்று நினைக்கிறேன். என் எண்ணம் சரியா? தவறா?
வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த மேற்கண்ட வினாவிற்கு- 1.கடவுள் 2.சாமி என்கிற இரண்டு தலைப்பையும் ஒன்றெனக் காட்ட முயல்கிற உலகின் போக்கு உங்களுக்கு இந்த எண்ணத்தை உருவாக்குகிறது. உங்கள் எண்ணம் சரிதான். ஆனால், இரண்டும் என்னென்ன? என்று தமிழ்முன்னோர் நிறுவிய அடிப்படையில் உங்கள் எண்ணம் நூறு விழுக்காடு தவறு என்று விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
வெளி என்கிற ஆற்றல் மூலத்திற்கு, கடந்தும் உள்ளும் இருத்தல் என்கிற, அது கொண்டிருக்கிற இயல்பில் அதற்கு தமிழ்முன்னோர் சூட்டிய பெயர் கடவுள்.
கடவுள் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே.
கடவுள் என்கிற தமிழ்ச்சொல்லில் பொதிக்கப்பட்ட பொருளில் உலகில் எந்த மொழியும் சொல் கொண்டிருக்கவில்லை.
நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல் மூலங்களுக்கு இறைந்து கிடப்பன என்கிற அது கொண்டிருக்கிற இயல்பில் அதற்கு தமிழ்முன்னோர் சூட்டிய பெயர் இறை.
இறை என்பது தமிழ்ச்சொல் மட்டுமே.
இறை என்கிற தமிழ்ச்சொல்லில் பொதிக்கப்பட்ட பொருளில் உலகில் எந்த மொழியும் சொல் கொண்டிருக்கவில்லை.
இயற்கையின் ஒவ்வொன்றையும், இந்த ஐந்து ஆற்றல் மூலங்களும் தொய்ந்தவை என்கிற இயல்பில் அவை ஒவ்வொன்றுக்கும், தமிழ்முன்னோர் சூட்டிய பெயர் தெய்வம்.
கடவுள் ஒன்று.
இறை நான்கு.
தெய்வம் பல.
கடவுளும் இறையும் ஆற்றல் மூலங்கள்.
தெய்வம் வழிபாட்டு மூலம்.
தெய்வம் மூன்று வகைப்படும்.
1. கடவுள் கூறு தெய்வங்கள்
2. இறைக்கூறு தெய்வங்கள்
3. குடும்ப மற்றும் குலதெய்வங்கள்.
தெய்வங்கள்- சாமி, இறைவன், இறைவி, ஆண்டவன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
சாமி என்கிற தலைப்பு அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானது. அனைத்து மதங்களின் தெய்வங்களையும் சாமி என்றே சுட்ட வேண்டும்.
எந்த மதத்தின் எந்த தெய்வத்தையும் கடவுள் என்றோ இறை என்றோ சுட்டுவது நூறுவிழுக்காடு பிழையாகும்.
கடவுள் என்கிற தலைப்பில் வெளி மட்டுமே வரும்.
இறை என்கிற தலைப்பில் நிலம், நீர், தீ, காற்;று மட்டுமே அமையும்.
ஐந்தும்- ஐந்திரம் என்கிற பொருள் பொதிந்த சொல்லில் அழைக்கப்பட வேண்டிய ஆற்றல் மூலங்கள் மட்டுமே.
ஐந்திரம் என்கிற தலைப்பை பேரைந்து என்கிற பொருளில் பிரபஞ்சம் என்று மொழிபெயர்த்து கொண்டுள்ளது சமஸ்கிருதம். பிர என்றால் பெரிய. பஞ்சம் என்றால் ஐந்து.
இறைவன் என்கிற தலைப்பு ஆண்பால் இறைக்கூறு தெய்வங்களான மாயோன், மன்னன், வருணன் ஆகியோரைக் குறிக்கும்.
இறைவி என்கிற தலைப்பு பெண்பால் இறைக்கூறு தெய்வமான கொற்றவையைக் குறிக்கும். அனைத்து பெண்பால் தெய்வங்களும் கொற்றவையின்கூறு என்கிற நிலையில் அனைத்தும் இறைவி ஆகும்.
ஆண்டவன் என்கிற தலைப்பு மருத நிலத்து இறைக்கூறு தெய்வம் மன்னனைக் குறிக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக